
ஜோகூர் பாரு, அக்டோபர்-23, கடந்த பிப்ரவரி முதல் நாட்டில் அமுலில் உள்ள இலக்கவியல் வடிவிலான மலேசிய வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரி தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.
சில தரப்புகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள போதிலும், தேசிய டிஜிட்டல்மயக் கொள்கைக்கு ஏற்ப அந்நடைமுறை தொடரும்;
அதனை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லையென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல்மய காலத்தில் பல்வேறு சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டன; எனவே நாமும் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் பழக்கிக் கொள்ளவேண்டுமென்றார் அவர்.
எனினும், தேவைப்படும் போது, உதாரணத்திற்கு அண்டை நாடுகளில் இருக்கும் சமயங்களில் அந்நாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப, உரிமத்தையும் சாலை வரியையும் அச்சடித்துக் கொள்ளலாம் என அந்தோனி லோக் கூறினார்.
தாய்லாந்து உள்ளிட்ட சில அண்டை நாடுகளில் நுழையும் போது, இலக்கவியல் உரிமங்களுக்கு பதிலாக வழக்கமான ஸ்டிக்கர் உரிமங்களையே அதிகாரிகள் கேட்கின்றனர்;
எனவே அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென சில தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆகஸ்ட் மாத வாக்கில் தாய்லாந்தில் நுழைந்த போது, இலக்கவியல் உரிமத்தை காட்டிய போதும், அது ஏற்றுக் கொள்ளப்படாமல் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக இரு ஆடவர்கள் முன்னதாக அதிருப்தி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.