
கோத்தா பாரு, அக்டோபர்-6,
மலேசிய சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமான தாய்லாந்தின் சுங்கை கோலோக் நகரில் உள்ள ‘பிக் சி’ (Big C) வணிக வளாகத்தில் நேற்று இரவு ஆயுதம் ஏந்திய எட்டு பேர் கொண்ட கும்பல் நுழைந்து தங்கம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில், அங்கு பணியாற்றிய ஒரு பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார் என்று சுங்கை கோலோக் போலீசார் தெரிவித்ததனர்.
அக்கும்பல், வணிக வளாகத்திற்குள் இருந்த “யாவோராட் க்ருங்தேப்” (Yaowarat Krungthep) என்ற நகைக் கடையை குறிவைத்து தாக்கியதாகவும், அச்சமயத்தின் போது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது எல்லைப் போலீஸ் ரோந்துப் பிரிவைச் சார்ந்த ஆயுத நிபுணர் காயமடைந்ததைத் தொடர்ந்து அவர் சுங்கை கோலோக் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் தங்கத்தை எடுத்து கொண்டு தப்பி செல்ல முயன்ற கும்பலை போலீசார் துரத்த முயன்றபோது, குற்றவாளிகள் சாலையில் கூர்மையான இரும்பு கம்பிகளைப் பரப்பியதோடு, எரிவாயு சிலிண்டர் போலக் காட்சியளிக்கும் சந்தேகப் பொருட்களை வணிக வளாகத்தின் முன் விட்டு சென்றனர்.
CCTV காட்சிகளில், அவர்கள் வெள்ளை நிற பிக்கப் வாகனத்தில் தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது. சம்பவத்துக்குப் பின், சுங்கை கோலோக் போலீசார் சம்பவ இடத்தை மூடிவிட்டு, வெடிகுண்டு ஒழிப்பு பிரிவின் (EOD) உதவியுடன் அந்தப் பொருளை பரிசோதித்தனர்.
இச்சம்பவத்துக்குப் பின், எல்லைப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தற்போது, சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.