
புது டெல்லி, மே-7- ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா மொத்தமாக 24 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அத்தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
Lashkar-e-Taiba, Jaish-e-Mohammad ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளும் அடவர்களில் அடங்குவர்.
இவ்வேளையில், குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத் கூறியது.
எனினும், தனது இராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என அது உறுதிப்படுத்தியது.
இந்த “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கை வெறும் இராணுவ பதிலடி அல்ல; அதற்கும் மேலானது என இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறின.
எல்லை கடந்த பயங்கரவாதத்தையோ அல்லது அதற்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களையோ இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளதாகவும் அவை வருணித்தன.
தாக்கப்பட்ட 9 இடங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையங்களாக அடையாளம் காணப்பட்டவையாகும்.
இதனால் அக்கும்பல்களின் செயல்பாட்டுத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.
பாகிஸ்தானிய இராணுவம், பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவளிப்பதற்கான தெளிவான ஆதாரங்களை இந்திய உளவுத்துறை மேற்கோள் காட்டியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன