
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – நாடாளுமன்ற தொடக்க விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் ஆற்றிய உரையைத் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, China Press வெளியிட்ட ஆன்லைன் செய்தியைத் தற்போது விசாரித்து வருகிறது.
பொதுமக்கள் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் MCMC இந்த விசாரணையை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் அடிப்படையில் தொடங்கியுள்ளது என்று அத்துறையின் அமைச்சர் Fahmi Fadzil குறிப்பிட்டுள்ளார்.
காவல் துறையில் தனிப்பட்ட புகார் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது வேறு வழக்காக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்றும், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையாள்வார்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மலேசிய ஊடக மன்றமான Majlis Media Malaysia ஒரு சுயாதீன அமைப்பாக, ஊடக ஒழுக்கநெறிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய, துல்லியமான மற்றும் பொறுப்பான செய்தியளிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் Fahmi வலியுறுத்தினார்.
இதனிடையே, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், நடந்து கொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நேற்று, China Press தனது முகநூல் பதிவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உரையை “மலாய் மொழி தெரியாவிட்டால், மலேசியாவில் இருக்க வேண்டாம்” என்ற தலைப்பில் முதலில் வெளியிட்டது. பின்னர் அதனை “மலாய் மொழியை ஏற்க முடியாவிட்டால், மலேசியாவில் வாழ வேண்டாம்” என திருத்தி மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.



