Latestமலேசியா

வங்காளதேசத்தில் மேலுமோர் இந்து நபர் படுகொலை; இந்தியாவில் ஆர்ப்பாட்டம்; மலேசியா கண்டிக்க ராயர் கோரிக்கை

புது டெல்லி, டிசம்பர் 26-வங்காளதேசத்தில் இந்துத் தொழிலாளி தீபு சந்திர தாஸ் (Dipu Chandra Das) படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நேற்று நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27 வயது தாஸ், மத அவமதிப்பு குற்றச்சாட்டில் கும்பலாகத் தாக்கப்பட்டு உயிரோடு தீ வைத்து கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்திற்கு அருகில் நடந்த போராட்டத்தில், போராளிகள் கோஷங்கள் எழுப்பி, வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் படங்களை எரித்தனர்.

வங்காளதேசத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், அங்குள்ள இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இதனிடையே டிப்பு சந்திர தாஸ் படுகொலைக்குப் பிறகு, வங்காளதேசத்தில் இன்னோர் இந்து ஆடவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், 29 வயது அம்ரித் மொண்டல் என்ற சாம்ராட் (Amrit Mondal alias Samrat) என அடையாளம் கூறப்பட்டது.

‘Samrat Bahini’ என்ற குண்டர் கும்பலின் தலைவராக சாம்ராட் இருந்ததாகவும், பிற நடவடிக்கைகளுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறிப்பதில் அக்கும்பல் ஈடுபட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கடந்தாண்டு ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பிறகு சாம்ராட் நாட்டை விட்டு வெளியேறி, அண்மையில் தான் ஊர் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

சிறுபான்மையினர் மீதான தாக்குதலாக இது கருதப்பட்டாலும், அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நிகழ்ந்து வரும் இந்த கொடூரங்கள் குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளார்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என அவர் கண்டித்தார்.

எனவே, மலேசிய அரசாங்கம் வலுவான எதிர்ப்பு தெரிவித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கிறிஸ்மஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்களையும் ராயர் கண்டித்து, மத அடக்குமுறைக்கு உலகளவில் எதிர்ப்பு தேவை எனக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!