Latest

கோலா லாங்காட் பகுதியில் கடும் புயல்; வீடுகள் & பள்ளிகள் சேதம்; பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயம்

கோலா லாங்காட், அக்டோபர் 16 –

கோலா லாங்காட் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலால் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து பலரும் காயமடைந்தனர்.

பலத்த காற்றுடன் கூடிய புயல் மற்றும் சிறிய சுழற்காற்று வீசியதைத் தொடர்ந்து சேதங்கள் பல ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சிஜாங்காங் ஜெயா இடைநிலைப்பள்ளி (SMK Sijangkang Jaya), சிஜாங்காங் ஜெயா தேசிய ஆரம்ப பள்ளி (SK Sijangkang Jaya), கம்போங் மேடான் ஆரம்பப் பள்ளி (SK Kg Medan), கம்போங் மேடான் சமய ஆரம்ப பள்ளி (Sekolah Rendah Agama Kampung Medan) மற்றும் ஜாலான் தஞ்சூங் ஆரம்பப் பள்ளி (SK Jalan Tanjung) உட்பட மொத்தம் 5 பள்ளிகள், ஒரு பொதுக்கூடம் மற்றும் சுமார் 40 வீடுகள் புயலால் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் பத்து 9 கம்போங் மேடான் (Batu 9 Kampung Medan) சமூக மண்டபம், சிஜாங்காங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (Pejabat Penyelaras DUN Sijangkang), கம்போங் மேடான் வீட்டு பகுதி மற்றும் சிஜாங்காங் தொழிற்துறைப் பகுதியும் இடம்பெற்றுள்ளன.

கம்போங் மேடான் சமய பள்ளியிலிருந்த 11 மாணவர்கள் லேசான காயங்களுக்கு ஆளாகிய நிலையில் அவர்களில் ஐவர் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதோடு மற்ற அறுவர் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஆண் ஒருவருக்கு கண் பகுதியில் காயம் அடைந்ததுடன், மற்றொரு பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவ்விருவரும் தற்போது கிள்ளான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புயலில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்காக சிஜாங்காங் பகுதியில் உள்ள ஹார்மோனி மண்டபத்தில் நேற்று இரவு தற்காலிக இடமாற்ற மையம் திறக்கப்பட்டது. அதே வேளை சுத்தம் செய்தல் மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் பல்வேறு துறைகளின் உதவியுடன் நேற்று மாலை முதல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!