
கோலாலம்பூர், அக்டோபர்-15,
கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று மதியம் மின் விநியோகத் தடை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெட்டாலிங் ஜெயா செக்சன் 8, மலாயா பல்கலைக்கழகம், புக்கிட் டாமன்சாரா மற்றும் மவுன்ட் கியாரா ஆகியவை அடங்கும் என்று கண்டறியப்பட்டது. மிட் வேலி மெகாமால், பெவிலியன் டாமன்சாரா ஹைட்ஸ் மற்றும் டிஆர்எக்ஸ் உள்ளிட்ட முக்கிய வர்த்தக மையங்களிலும் மின் விநியோகத் தடை ஏற்பட்டது.
கெப்போங் மற்றும் கோலாலம்பூரில் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதை தெனாகா நேசனல் பெர்ஹாட் (TNB) தனது முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியது.
தெனாகா நேசனலின் தகவல்படி , அதன் தொழில்நுட்பக் குழு தற்போது விநியோக பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ளது. பயனீட்டாளர்களின் பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெனாகா நேசனல் தெரிவித்துள்ளது. மின் தடை ஏற்பட்டதை நெட்டிசன்களும் தெரிவித்தனர்.



