
பெய்ஜிங், அக்டோபர்-20, சீனா, Shenzhen நகரில் இராட்சத மீன் தொட்டியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திமிங்கல சுறா மீன், உண்மையில் ஒரு ரோபோ இயந்திரம் என தெரிய வந்ததால் சுற்றுப்பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஐந்து வருட புனரமைப்புக்குப் பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட கடல் பூங்காவில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அந்த ‘திமிங்கல சுறா மீன்’ விளங்கி வந்தது.
அதனைப் பார்ப்பதற்காகவே முதல் வாரத்தில் மட்டும் 100,000 பேர் குவிந்தனர்.
எனினும், 169 ரிங்கிட்டை நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி உள்ளே சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
‘திமிங்கல சுறா’ வின் உடலில் இடைவெளிகள் அப்பட்டமாக தெரிந்ததால் உண்மையில், அது ஒரு ரோபோ இயந்திரமே என்பது ஊர்ஜிதமானது.
இதனால் சினமடைந்த பலர், கடல் பூங்கா நிர்வாகத்திடமிருந்து பணத்தைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தினர்.
எனினும் பூங்கா நிர்வாகம் தனது அச்செயலைத் தற்காத்துள்ளது.
திமிங்கல சுறா மீன் வணிகத்தை சீன அரசாங்கம் தடை செய்துள்ளதால், வேறு வழியின்றி லட்சக்கணக்கான செலவில் அந்த ‘ரோபோ சுறாவை’ தயாரித்தோம்.
மற்றபடி பார்வையாளர்களை ஏமாற்றும் நோக்கம் தங்களுக்கில்லை என அது தெளிவுப்படுத்தியது.