
கோலாலம்பூர், மார்ச்-20 – சம்பந்தப்பட்ட தரப்புகள் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படாத வரையில் கோயில் உடைக்கப்படாது என்ற கோலாலம்பூர் மேயரின் கடப்பாட்டை, ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய நிர்வாகம் வரவேற்றுள்ளது.
என்றாலும், தற்போதுள்ள நிலத்திலேயே ஆலயம் தொடர வேண்டும் என்பதே அதன் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாகும் என, அவர்களின் பிரதிநிடியான டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.
தனியாருக்குச் சொந்தமான நிலமாகி விட்டாலும், 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அக்கோயில் அங்கேயே நிலைத்திருக்க உதவ வேண்டியது DBKL-லின் சமூகக் கடமையாகும்.
இது தவிர, 2014-ஆம் ஆண்டு அந்நிலம் தனியாருக்கு விற்கப்பட்ட விஷயம், கோயில் நிர்வாகத்துக்குத் தெரியாது என அம்பிகா சுட்டிக் காட்டினார்.
அந்நிலத்தில் கோயிலுக்கும் ‘equitable interest of land’ என்ற சம முக்கியத்துவம் உள்ளது; அதனை DBKL-லும் நில உரிமையாளரும் கருத்தில் கொண்ட வேண்டும்.
மஸ்ஜித் இந்தியா என்பது தனிச்சிறப்புமிக்க பகுதியாகும்; முஸ்லீம்களோ இந்துக்களோ, அது இந்தியர்கள் அதிகம் வாழுமிடம்.
உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிகளவில் தேடி வரும் கோயில் அது; இத்தனை ஆண்டுகளாக அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் நிலையில், இப்போது அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியமென்ன என அம்பிகா கேள்வி எழுப்பினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது; மாறாக, சுமூகமான முறையில் ஆலயத்தை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென, மாநகர மேயரும் நிலத்துக்குச் சொந்தக்காரரான Jakel Sdn Bhd முன்னதாகக் கூறியிருந்தன.
Jakel அங்கு ‘மஸ்ஜித் மடானி’ என்ற புதிய மசூதியைக் கட்டவிருப்பதாகவும், அதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இம்மாதக் கடைசியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்பார் இப்ராஹிம் சிறப்பு வருகைப் புரியவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.