
புத்ராஜெயா, செப்டம்பர்-30,
நாட்டில் இன்று முதல் உதவித்தொகை இல்லாத RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM2.60 என நிர்ணயிக்கப்படுகிறது.
இது அரசாங்கத்தின் BUDI95 மானியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதன் ஓர் அங்கமாகும்.
இந்த விலை அக்டோபர் மாதம் முழுவதும் நிலைத்திருக்கும்; பின்னர் உலகச் எண்ணெய் சந்தை விலைகளின் அடிப்படையில் மாற்றப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி BUDI95-க்கு தகுதிப் பெற்ற மலேசியர்கள் ஒரு லிட்டருக்கு RM1.99 மட்டுமே செலுத்துவார்கள்.
பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளுக்கு விலை RM2.05-ராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், RON97 பெட்ரோலின் விலை RM3.21-னாகவும், டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் RM2.93 மற்றும் கிழக்கு மலேசியாவில் RM2.15-னாகவும் தொடருகிறது.
இவ்விலைகள் அக்டோபர் 8 வரை நடைமுறையில் இருக்கும்.
இதனிடையே e-hailing ஓட்டுநர்களுக்கு, கூடுதல் எரிபொருள் உதவித்தொகை வழங்க அரசாங்கம் சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
அதற்கான விண்ணப்ப முறை இந்த வாரத்திற்குள் முடிவுச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
மக்களின் நலனை பாதுகாக்கவும் விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் என்றார் அவர்.