
ஜோர்ஜ்டவுன், மே-6, பொது இடங்களில் புறாக்களுக்குத் தீனிப் போட்டதற்காக 5 பேருக்கு பினாங்கு மாநகர மன்றமான MBPP அபராதம் விதித்துள்ளது.
1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டடச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் MBPP கூறியது.
அபராதம் கட்டத் தவறினால் அவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டி வருமென என அது எச்சரித்தது.
புறாக்களுக்கும் மற்ற பிராணிகளுக்கும் பொது இடங்களில் தீனிப் போடுவதாக நினைத்து, ஆங்காங்கே உணவுகளின் மிச்ச மீதியை இவர்கள் போட்டு விட்டுச் செல்கின்றனர்.
இதனால் பொது இடங்களில் தூய்மைக் கெடுகிறது; இதைத் தடுக்கவே இந்த அமுலாக்க நடவடிக்கையென MBPP விளக்கியது.
இது குறித்து எவ்வளவோ விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டும், மக்கள் கேட்பதாக இல்லையென அது ஏமாற்றமும் தெரிவித்தது.
புறா இனத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கடந்த மாதம் மட்டும் 818 புறாக்களை MBPP பிடித்திருக்கிறது; அதே சமயம் 36 காகக் கூடுகளும் அழிக்கப்பட்டன