
கோலாலம்பூர், ஏப்ரல்-17, அமைச்சுகளில் இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக, நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாசலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக உள்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு போன்றவற்றில் பணியில் உள்ளவர்களை இனவாரியாக பட்டியலிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தமக்கு வழங்கப்பட்ட எழுத்துப் பூர்வ பதிலை அடிப்படையாகக் கொண்டால், இந்த 4 அமைச்சுகளிலும் வேலை செய்வோரில் வெறும் 4 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியவர்களாவர்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடாக இருக்கும் நிலையில், அதை விட குறைவாகவே அரசுப் பணிகளில் நம்மவர்கள் உள்ளனர்.
இனி வரும் காலங்களில், அரசாங்கத் துறைகளில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சில முக்கியப் பரிந்துரைகளையும் லிங்கேஷ் முன் வைத்துள்ளார்.
இந்தியச் சமூகம் மற்றும் பள்ளிகளை இலக்கு வைத்த ஆட்சேர்ப்பு, இந்திய இளைஞர்களுக்கு தொழில்துறை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஒதுக்குவது, பொதுச் சேவைத் துறை வேலைகளுக்கான உபகாரச் சம்பளம் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை அவற்றிலடங்கும்.
இது தவிர, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும், ஒவ்வோர் அமைச்சிலும் பணியாளர் பன்முகத்தன்மை குறித்து ஆண்டறிக்கைச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.
“அரசுப் பணி, அது சேவை செய்யும் மக்களைப் பிரதிபலிக்க வேண்டும். இது பாரபட்சம் பற்றியது அல்ல, நியாயத்தைப் பற்றியது” என்றார் அவர்.
ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் இந்நாட்டிற்கு சேவை செய்வதில் தங்களுக்கு எதிர்காலம் இருப்பதாக உணர வேண்டும் என Dr லிங்கேஷ் வலியுறுத்தினார்.