
கோலாலாம்பூர், ஜூலை-29- தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் குடிநுழைவுத் துறை இன்று நடத்திய அதிரடிச் சோதனையில், 171 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
முறையான ஆவணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து, அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு அதிகாரிகள் வந்தபோது, அவர்களில் பலர் பரிசோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு சிலர் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல் பாசாங்கும் செய்தனர்.
சிலர் ஆவேசமாக நடந்துகொண்டதோடு, அமுலாக்க அதிகாரிகளை சினமூட்டியும், தப்பியோடவும் முயன்றனர். அப்போது கனமழை பெய்து, அமுலாக்க நடவடிக்கைக்கு கூடுதல் சவாலாக அமைந்தது.
ஆனால், புத்ராஜெயாவிலிருந்து 160 அதிகாரிகள் பலத்தோடு வந்திருந்த குடிநுழைவுத் துறையிடம் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை.
மொத்தமாக 14 கடைகளும், 758 வெளிநாட்டவர்களும் சோதனையிடப்பட்டதில், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 171 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் இந்தியா, வங்காளதேசம், மற்றும் இந்தோனேசிய நாட்டவர்கள் ஆவர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, வேலை பெர்மிட் இல்லாதது, அடையாள ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்டவை அவர்கள் புரிந்தக் க்குற்றங்களில் அடங்கும்.



