Latestமலேசியா

இந்து – புத்த மதங்களின் ஆதிக்கத்தை நிரூபிக்க முயல்வதா? பூஜாங் பள்ளத்தாக்கு மாநாட்டை இரத்துச் செய்ய PEKIDA கோரிக்கை

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-12- பண்டைய கெடா துவா நாகரீகம் குறித்த அனைத்துலக மாநாட்டை இரத்துச் செய்யுமாறு மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று, USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளது.

இம்மாநாடு, மலாய் வரலாற்றின் மீது இந்து-புத்த சமயங்களின் தாக்கத்தை ‘திணிப்பதாக’ PEKIDA கூறிக் கொண்டது.

கெடா துவா, இந்து – புத்த மதங்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதை நிரூபிப்பதே அம்மாநாட்டின் நோக்கமாகும் என, PEKIDA பேச்சாளர் Ahmad Yakqub Nazri குற்றம் சாட்டினார்.

கெடாவில் ஆரம்பகால நாகரிகங்கள் ஒரே கடவுளை நம்பியதாகவும், கெடா துவாவில் உள்ள உள்ளூர் ஆட்சியாளர்கள் இந்து அல்லது புத்த மத வருகைக்கு முன்பே அரபு வணிகர்களால் மதம் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, USM வளாகத்துக்கு வெளியே PEKIDA மற்றும் Gabungan Hak Bela Insan அமைப்பும் இணைந்து நடத்திய அமைதி மறியலின் போது அவர் அதனைத் தெரிவித்தார்.

பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படும் சுங்கை பத்து மீது கவனம் செலுத்தப்படுவதையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

கடந்த கால அகழ்வாராய்ச்சிகள், பூஜாங் பள்ளத்தாக்குக் கட்டுமானத்தை இந்து கோயில்களாக அடையாளம் காட்டின.

ஆனால், பூஜாங் பள்ளத்தாக்கு கோயில் இடிபாடுகள் ஆரம்பகால இந்து ஆதிக்கத்தை குறிப்பதாகக் கூறப்படும் கருத்தை Yakqub நிராகரித்தார்.

“நாங்கள் பூஜாங் பள்ளத்தாக்குக்குச் சென்று கட்டமைப்புகளைப் பார்த்தோம்; அவை வெறும் சதுரத் தூண்கள், இந்து கோயில்களை ஒத்திருக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

எனவே இம்மாநாடு இரத்துச் செய்யப்பட வேண்டும்; இல்லையென்றால் போலீஸில் புகார் செய்யப்படுமென Yazqub கூறினார்.

இவ்வேளையில் மலேசியாவின் ஆசியான் தலைமையை ஒட்டியே அம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுவோர்ஆராய்ச்சி பணியே; மாறாக எந்தவோர் இனத்துக்கோ மதத்துக்கோ ஒரு சார்பானது அல்ல என USM விளக்கியது.

ஆட்சேபத்தை அடுத்து மாநாடு இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்விக்கு அது பதிலளிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!