
கோத்தா கினபாலு, ஜன 22 – ஷாரா கைரினா மகாதீரின் ( Zara Qarina Mahathir ) மரணத்திற்கான காரணத்தை விசாரிப்பதற்கான மரண விசாரணை நேற்று மீண்டும் தொங்கியதை தொடர்ந்து புதிய ஆதாரங்களை வழங்குவதற்காக துன் டத்து முஸ்தபா (Tun Datu Mustapha ) சமய இடைநிலைப்பள்ளி மாணவர் விடுதியின் முன்னாள் தலைமை வார்டன் அஷாரி அப்துல் சகாப் (Azhari Abd Sagap) சாட்சியம் அளித்தார்.
எட்டாவது சாட்சியான அஷாரி , பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கோத்தோங் ரோயோங் நடவடிக்கையின் போது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காகிதத்தில் காணப்பட்ட புதிய ஆதாரத்தை வெளிப்படுத்தினார்.
இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, நீதிமன்றம் தனது நடவடிக்கைகளை நேற்று மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தது. பள்ளியின் Badar எனப்படும் சமய பிரச்சார மற்றும் நன்னெறி அமைப்பின் மாணவர் தலைவராக வரவேண்டும் என்பதில் Zara தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த காகிதத்தில் இருந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாக அஷாரி தெரிவித்தார்.
இந்த புதிய ஆதாரம் கடந்த ஆண்டு போலீசிடம் தெரிவிக்கப்பட்டதோடு Zara வின் இந்த ஆர்வத்தை அவர் தனது டைரியிலும் எழுதியிருந்ததையும் அஷாரி சுட்டிக்காட்டினர்.
துன் டத்து முஸ்தபா பள்ளியின் முன்னாள் மாணவியான Zara தனது பள்ளிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஜூலை 17 ஆம் தேதியன்று இறந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி அவரது மரண விசாரணை தொடங்கியது.



