
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-6- பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றும் ‘சதி’ வேலையில் தாமும் ஓர் அங்கம் எனக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ மறுத்துள்ளார்.
“Light Hotel Conspiracy” என்ற பெயரில் அப்பொய்க் குற்றச்சாட்டு பரப்பப்படுவதாக, வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான அவர் சொன்னார்.
“எந்தவொரு சதியின் பின்னாலும் நானில்லை. எந்த இரகசியக் கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. என் பெயரைக் கெடுப்பதற்காகவே இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன” என்றார் அவர்.
களங்கம் கற்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்தார்.
அறப்பணி வாரியத்தின் தலைவராக சுந்தரராஜூவை கொண்டு வரும் முயற்சியில் ஒரு ‘தான் ஸ்ரீ-யும்’ 3 ‘டத்தோ ஸ்ரீ-க்களும்’ லைட் ஹோட்டலில் இரகசியமாகச் சந்தித்து பேசியிருப்பதாக ஒரு குறுந்தகவல் முன்னதாக வைரலானது.
DAP உறுப்பினருமான சுந்தரராஜூ, கொல்லைப்புற அதிகாரப் போராட்டத்தின் மூலம் கட்சிக்கு துரோகமிழைப்பதாக, அந்த அனாமதேய தகவலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அறப்பணி வாரியத்தின் தலைவராக இருக்கும் RSN ராயர் அண்மைய DAP மத்திய செயலவைத் தேர்தலில் தோல்வி கண்டதிலிருந்து, அவரின் பொறுப்பிற்கு வேறொருவர் நியமிக்கப்படுவார் என் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
வாரியத்தின் புதியத் தலைவராகப் பொறுப்பேற்க தாம் தயாராக இருப்பதாக, பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் ஜக்டீப் சிங் டியோ வெளிப்படையாகவே அறிவித்தது, விஷயத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
ஓர் இந்து அமைப்புக்கு சீக்கியர் தலைவராகலாமா என விவாதம் சூடுபிடித்தது.
இந்நிலையில் தற்போது சுந்தரராஜூவின் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. நிலைமையை பார்க்கும் போது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கட்சி மற்றும் மாநில அரசியல் இழுப்புகளுக்குள் சிக்கிக் கொள்ளுமா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.