
கோலாலம்பூர், அக்டோபர்-10, பினாங்கு துறைமுகத்தில் 2 சீன கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், நாட்டின் இறையாண்மைக்கு எந்தவோர் அச்சுறுத்தலும் இல்லை.
ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) அவ்வாறு கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற மற்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் மலேசியத் துறைமுகங்களில் வந்து நிற்பது வழக்கமான ஒன்றுதான்;
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா நிர்ணயித்த நெறிமுறைகளைப் பின் பற்றியே அவை அவ்வாறு செய்கின்றன.
தங்களின் இலக்கைச் சென்றடையும் முன் ஒரு சில நாட்களுக்கு அவை இங்கு வந்து நிற்கும்.
அது தற்காப்பு அமைச்சுக்கும் தெரியுமென, ஃபாஹ்மி சொன்னார்.
பெரும்பாலும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சமூக நடவடிக்கைகளில் அவை ஈடுபடும்.
இந்த உண்மைத் தெரியாமல் பலர் இனவாத மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசி வருவதாக அமைச்சர் ஏமாற்றம் தெரிவித்தார்.
எனவே, இது போன்ற தேவையற்ற கருத்துகளைக் கூறி வீண் பதற்றத்தை ஏற்படுத்துவோரை, போலீசும், மலேசிய பல்லூடக-தொடர்பு ஆணையமும் (MCMC) கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
சீனக் கடற்படைக் கப்பல்களுக்கு ‘மகத்தான வரவேற்பு’அளிக்கப்படுவது ஏன் என பெர்சாத்து கட்சியின் சைஃபுடின் அப்துல்லா முன்னதாக கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.