
சென்னை, செப்டம்பர்-19,
மேடைக் கலைஞராகத் தொடங்கி சின்னத்திரையிலும் பின்னர் வெள்ளித்திரையிலும் நகைச்சுவையில் ஜொலித்தவர் ரோபோ சங்கர்.
இந்நிலையில், சினிமாவில் நகைச்சுவையில் பெரிய இடத்துக்கு வருவார் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர், வெறும் 46 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்டு வந்து, முன்புபோல் நடிக்கத் தொடங்கிய ரோபோ சங்கர் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து சென்னை பெருங்குடியில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் அடையாளமே
விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி தான்; அதில் அவரின் தனித்துவமிக்க மிமிக்ரி திறமையும் உடல் மொழியும் இரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
பின்னர் 2007-ஆம் ஆண்டு நடிகர் ரவி மோகனின் தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித் திரையில் நுழைந்தார்.
படிப்படியாக முன்னேறியவர், விஜயின் ‘புலி’, அஜீத் குமாரின் ‘விஸ்வாசம்’, தனுஷின் ‘மாரி’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ போன்ற பெரியப் படங்களில் நடித்தார்.
அவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இந்த்ரஜா என்ற மகளும் உள்ளனர்; இருவருமே நடிகைகள் ஆவர்.
இவ்வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு நடிகர்கள் வரை ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
நடிகர் கமல்ஹாசன் தனது X தளத்தில் வேதனையில் இரங்கல் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் தீவிர இரசிகரான ரோபோ சங்கருக்கு, ஏற்கனவே உடல் நலக் குறைவாக இருந்த போதே கமல் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த வீடியோவும் தற்போதும் வைரலாகி வருகிறது.
தனது வாழ்நாளில் எல்லாரையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் இள வயது மறைவால் சின்னத்திரை வெள்ளித்திரை இரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.