
பிராய், பினாங்கு ஜூலை 3 – அண்மைய காலமாக புயல் மற்றும் கனமழையால் பிராய் தாமான் துன் சர்டானிலிருக்கும் (Prai, Taman Tun Sardon) AR மற்றும் AT கட்டிடங்களின் கூரைகள் கடுமையாக சேதமடைந்ததைத் தொடர்ந்து, பினாங்கு மாநில வீட்டுவசதி வாரிய குழுவினருடன் (LPNPP) இணைந்து டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு அதனை சரி செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சேதாரம் ஏற்பட்ட இரண்டே நாட்களில், LPNPP தலைமை வணிக அதிகாரி ஒய்பி டான் ஹூய் பிங், துவான் ஹாஜி ஃபகுர்ராசி பின் இப்னு உமர், பினாங்கு மாநில சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சேதத்தை நேரில் சென்று ஆய்வு செய்ததாக டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு கூறியுள்ளார்.
ஆபத்தான கூரை குப்பைகள் மற்றும் மர கட்டமைப்புகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை ஒரே நாளில் நியமித்ததுடன் விரைவான மற்றும் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்தம் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிராய் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் பராமரிக்கப்படுவதை பினாங்கு மாநில அரசு உறுதி செய்யுமென்று அவர் உத்தரவாதமளித்துள்ளார்.