
கோலாலாம்பூர், ஜூலை-27 – நேற்று தலைநகரில் நடைபெற்ற ‘Turun Anwar’ பேரணியில் 3,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றதாக, MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன் கூறியுள்ளார்.
“அரசு சாரா அமைப்புகள் உதவியுடன் இந்தியர்களை பேரணிக்கு வரவழைத்த எங்களுக்குத் தெரியும் எத்தனைப் பேர் வந்தார்கள் என்று” என புனிதன் சொன்னார்.
அப்பேரணியில் இந்தியர்கள் குறைவாகவே பங்கேற்றதாகவும், இதன் மூலம் இந்தியச் சமூகத்தின் ஆதரவு இன்னமும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கே என்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் முன்னதாக அறிக்கை விட்டார்.
அவரின் கூற்றை மறுத்து பதிலடி கொடுக்கும் வகையில் புனிதன் அவ்வாறு சொன்னார்.
இந்தியர்களின் பங்கேற்பு பிசுபிசுத்துப் போனதாக கூறும் குணராஜ், யாருக்கும் தெரியாமல் பேரணியில் பங்கேற்ற இந்தியர்களை விரல் விட்டு எண்ணினாரா என, புனிதன் வினவினார்.
குணராஜின் செந்தோசா சட்டமன்றத் தொகுதியிலிருந்தே ஏராளமான இந்தியர்களை பேரணிக்கு நாங்கள் வரவழைத்தோம் என்பது அவருக்குத் தெரியாது போலும் என புனிதன் சொன்னார்.
வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்ட அன்வார் மீது இந்தியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதே, நேற்றைய பேரணியில் அவர்கள் திரளாகப் பங்கேற்றதன் காரணம் என அவர் கூறிக் கொண்டார்.
நேற்றையப் பேரணியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சி என்ற வகையில் MIPP-யைப் பிரதிநிதித்து புனிதனும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.