
டாவோஸ், ஜனவரி-22- ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்ட பதற்றத்தைக் குறைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கிரீன்லாந்து மற்றும் வட துருவ பாதுகாப்பு தொடர்பில் வாஷிங்டனுக்கு எதிராக பேசியிருந்த சில ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்படவிருந்த வரி உயர்வுகளை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அவர் அதை அறிவித்தார்.
முன்னதாக, நேட்டோ தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், கிரீன்லாந்துக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
மாறாக, நேட்டோவுடன் ஒத்துழைப்பு அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றார் அவர்.
ட்ரம்பின் இந்த ‘திடீர்’ முடிவை வரவேற்ற ஐரோப்பியத் தலைவர்கள், கிரீன்லாந்து, என்றுமே டென்மார்க்கின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசமாகவே நீடிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினர்.
ட்டிம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலால் அதிகரித்த வாணிப பதற்றம் இதன் மூலம் தணிந்து, பங்குச் சந்தைகளும் சீராக இயங்கின.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் திட்டத்தை எதிர்ப்பதால், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஃபின்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், பிரிட்டன் ஆகிய 8 நாடுகள் மீது கூடுதல் வரியைத் திணிப்பேன் என ட்ரம்ப் மிரட்டியிருந்தது நினைவிருக்கலாம்.



