கோலாலம்பூர், டிசம்பர்-22, மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனைகள் மர்மமான முறையில் இறந்துபோனதாக கிடைத்த 2 வெவ்வேறு புகார்கள் குறித்தும், கால்நடை சேவைத் துறையான DVS உடனடி விசாரணை நடத்தியுள்ளது.
வர்த்த மற்றும் பொருளாதார கல்விப் புலத்தில் பூனை இறந்த சம்பவம் குறித்து டிசம்பர் 17-ல் புகார் வந்தது.
பூனை இறந்ததோ டிசம்பர் 12-ல் என்றும், அது புதைக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சாட்சிகளும் இல்லை, CCTV பதிவுகளும் இல்லை.
விசாரணையில் சடலமோ, இரத்தமோ உள்ளிட்ட எந்த தடயமும் கிடைக்கவில்லை என அறிக்கை வாயிலாக அது விளக்கியது.
இரண்டாவதாக , UM நூலகம் உள்ளிட்ட 4 இடங்களில் பூனைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக டிசம்பர் 20-ஆம் தேதி ஒரு புகார் வந்தது.
புதைக்கப்பட்ட பூனையின் சடலத்தைத் தோண்டியெடுத்ததில், பிரேத பரிசோதனை நடத்த முடியாத அளவுக்கு அது முற்றாக சிதைந்திருந்தது.
இந்நிலையில் பூனையின் சடலங்கள் மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு தெரியாத, கால்நடை கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இவ்விஷயத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய DVS, இதுபோன்ற மிருகவதை சம்பவங்கள் குறித்து கால்நடை சேவைத் துறையிடம் அதிகாரப்பூர்வமாக புகாரளிக்குமாறு அறிவுறுத்தியது.
அப்போது தான் 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.
மாறாக, தொடக்கத்திலேயே சரியான தரப்பை அணுகா விட்டால், விசாரணைகள் இப்படித் தான் பாதிக்கப்படுமென DVS சுட்டிக் காட்டியது.