புத்ரா ஜெயா, நவ 28 -UPM எனப்படும் Universiti Putra Malaysia வை
அதன் பழைய பெயரான Universiti Pertanian Malaysia என்று மாற்றுவதற்கான
ஆலோசனை அமைச்சரவையிடம் தெரிவிக்கப்படும். இந்த ஆலோசனையை தாம் விரைவில் அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டுவரப் போவதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார். நாடு தற்போது உணவு உத்தரவாத விவகாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு முன் Universiti Putra Malaysia வின் அசல் பெயர் Universiti Pertanian Malaysia என இருந்ததால் அந்த பெயரை மீண்டும் அப்பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவருவதுதான் பொருத்தமாக இருக்கும் என தாம் கருதுவதாக முகமட் சாபு சுட்டிக்காட்டினார். அந்த பெயரை நாம் மாற்றியபோது பருவநிலை மாற்றம் விவகாரத்தை நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலம். ஆனால் இப்போது விவசாயம் உலக பிரச்னையாகிவிட்டது. ஐ.நா உட்பட அனைவருமே விவசாயம் குறித்து விவாதிக்கிறோம் என நேற்றிரவு செர்டாங் UPM மில் MyIDEAS கருத்தரங்கில் உரையாற்றியபோது முகமட் சாபு தெரிவித்தார்.