கோலாலம்பூர், நவம்பர்-12 – UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் பகடிவதைச் சம்பவங்களைத் தடுக்கும் முயற்சியாக, மேலும் அதிகமான CCTV கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.
மாணவர் தங்கும் விடுதிகளின் அனைத்து புளோக்குகளிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுமென, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதலே மற்ற மூத்த மாணவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு முதலாமாண்டு மாணவர்களைத் தனியாக தங்கவைப்பட்டார்கள்.
ஆனால், அக்டோபரில் எப்போது, இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானதோ, அப்போதிலிருந்தே மாடி வாரியாகவும் அவர்களைப் பிரித்து விட்டதாக அமைச்சர் சொன்னார்.
இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தும் நிலைமை கை மீறிப் போனால், நடவடிக்கைகளும் இன்னும் கடுமையாகும்.
அதிகாலை 2 மணியானாலும் 4 மணியானாலும் பயிற்சிக்கு அழைக்கப்பட வேண்டியிருக்கும்; அந்த விடியற்காலையில் அவர்கள் எழுந்து, சீருடைகள் அணிந்தும், ஆயுதங்கள் ஏந்தியும் வரிசையில் நின்று பயிற்சிக்குத் தயாராக வேண்டுமென காலிட் நோர்டின் எச்சரித்தார்.
அக்டோபர் 21-ஆம் தேதி சுங்கை பீசி UPNM முகாமில் மூத்த மாணவரால் மிதிக்கப்பட்டு முதலாமாண்டு மாணவர் விலா மற்றும் முதுகெலும்பு முறிவுக்கு ஆளானதாக சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இதற்கு முன் அதே பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவரால் இளைய மாணவர் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.