கோலாலம்பூர், நவம்பர்-14 – UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகத்தின் இராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அடிக்கடி உடல் ரீதியான பரிசோதனைகள் நடத்தப்படவிருக்கின்றன.
அவர்கள் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அவ்வாறு செய்யப்படுவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பகடிவதை சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிச் செய்ய எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்டு வரும் 8 அம்ச தடுப்பு நடவடிக்கைகளில் அதுவும் அடங்கும் என்றார் அவர்.
அதோடு, இராணுவப் பயிற்சி என்றப் போர்வையில் எல்லை மீறும் மேலதிகாரிகள் குறித்து எவ்வித பயமோ தயக்கமோ இல்லாமல் புகாரளிக்க ஏதுவாக, பயிற்சி மாணவர்களுக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பிரத்தியேகச் சந்திப்பு நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
இவ்வேளையில், உயர் கல்விக் கூடங்களில் இது போன்ற பகடிவதை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக, பெர்சாத்து கட்சியின் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்டோர் மீது அமைச்சும் போலீசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவர்களும் தைரியமாக முன்வந்து புகாரளித்தால் தான் பகடிவதை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து, நியாயம் கிடைக்கும் என, பெர்சாத்து கட்சியின் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களுக்கான Sayap Bersekutu பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் கூறினார்.
UPNM பல்கலைக்கழகத்தின் இராணுவ பயிற்சி வீரர்களை உட்படுத்திய 2 பகடிவதை சம்பவங்கள், அண்மையில் அடுத்தடுத்து அம்பலமாகின.
மூத்த மாணவர்களால் ஒருவர் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்டதும், மற்றொருவர் நெஞ்சில் மிதிக்கப்பட்டு விலா மற்றும் முதுகெலும்பு முறிவுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.