புத்ராஜெயா, செப்டம்பர்-11 – அதிகார முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான 4 குற்றச்சாட்டுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று அத்தீர்ப்பை வழங்கியது.
பிரதமருக்கான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெர்சாத்து கட்சிக்காக 232.5 மில்லியன் ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக முஹிடின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த 4 குற்றச்சாட்டுகளிலுமிருந்து முஹிடினை விடுவித்து விடுதலை செய்தது.
எனினும், அரசு தரப்பு செய்த மேல் முறையீட்டை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அந்நான்கு குற்றச்சாட்டுகளையும் நிலை நிறுத்தியது.
அம்முடிவை மறுஆய்வு செய்யக்கோரும் முயற்சியில் முஹிடின் இன்று தோல்விக் கண்டிருப்பதால், செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.