
கோலாலம்பூர், மார்ச் 26- மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதிவரை ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக இளம் புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொண்ட ரவாங் தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சஞ்சனா ஜெகதீஸ்வரன் மற்றும் மாணவர் Laxshan சண்முகநாதன் தங்கப் பதக்கங்களை வென்றதோடு ,ஹாங்காங் சிறப்பு விருது மற்றும் 800 ஹங்காங் டாலர் பரிசுத் தொகையையும் வென்றனர்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் கண்டுப்பிடிப்பான 2in1 இலை உரம் மற்றும் பூச்சி விரட்டி, அனைத்துலக அங்கீகாரத்தை பெற்றதன் மூலம் மலேசியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தியுள்ளது.
அந்த போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளியாக ரவாங் தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளி திகழ்கிறது.
இந்த போட்டியில் பல நாடுகளையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்துகொண்டன.
சஞ்சனா மற்றும் Laxshan ஆகியோரின் வெற்றி தொடக்கப் பள்ளியில் பயின்றுவரும் இளம் கண்டுப்பிடிப்பாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த வேளையில் இளம் புத்தாக்க கண்டுப் பிடிப்பு போட்டியில் சஞ்சனா மற்றும் Laxshan ஆகியோரை கலந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட இளம் அறிவியலாளர் (young scientists) அமைப்பாளர் சண்முகநாதன், அந்த அமைப்பின் ஆசிரியை திருமதி லீலா மற்றும் ரவாங் சீனார் நீலாம் (Sinar Nilam) பாலர் பள்ளி ஆசிரியை திருமதி சங்கீதா , பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன் மற்றும் பள்ளியின் தலைலையாசிரியை திருமதி யசோதா மாணிக்கம் ஆகியோருக்கும் சஞ்சனா மற்றும் Laxshan பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.