
வாஷிங்டன், மார்ச் 17 – வார இறுதியில் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை கடுமையான புயல் தாக்கியதில் மிசோரி மாநிலத்தில் 12 பேர் உட்பட குறைந்தது 34 பேர் மரணம் அடைந்ததோடு டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புளோரிடா (Florida), ஜார்ஜியா (Georgia ) மற்றும் ஐந்து மாநிலங்களின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை புயல் எச்சரிக்கைகள் இருந்தன.
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கடற்கரை பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஜார்ஜியா ஆளுநர் பிரையன் கெம்ப் (Brian Kemp) அவசரகால நிலையை அறிவித்துள்ளதோடு வெளியேறுவதற்கு தயாராய் இருக்கும்படி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அதிக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் நிலத்தடி தங்குமிடங்களைக் கொண்ட கட்டிடங்களில் தஞ்சம் அடைவதோடு , நடமாடும் வீடுகளைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
புயல் வெள்ளிக்கிழமை தொடங்கியதோடு , மிசோரி, ஆர்கன்சாஸ், மிசிசிப்பி, லூசியானா, இல்லினாய்ஸ், டென்னசி, அலபாமா மற்றும் இந்தியானா ஆகிய எட்டு மாநிலங்களில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட சூறாவளி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
(Missouri, Arkansas, Mississippi, Louisiana, Illinois, Tennessee, Alabama dan Indiana)
புழுதிப் புயல் நெருங்கியதால், டஜன் கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், குடியிருப்புவாசிகள் தங்கள் வாகனங்களுடன் வெளியேறினர்.
கன்சாஸில், சனிக்கிழமையன்று நடந்த தொடர் விபத்தில் 50 வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.
பல பகுதிகளில் புயலால் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தது மட்டுமின்றி, மின் தடையும் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஐந்து மாநிலங்களில் 230,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
கடுமையான காற்றும் தற்போதுள்ள காட்டுத் தீயை அதிகப்படுத்தியுள்ளது.
ஓக்லஹோமாவில் (Oklahoma) மட்டும், 170,000 ஹெக்டேர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.