கோலாலம்பூர், நவம்பர்-27,
அரசாங்க மானியம் கிடைத்த முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு, e-RIBI தளத்தில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மூன்றாண்டுகள் தடை விதிக்கும் உத்தேசப் பரிந்துரை, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்றச் சூழலில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் மானியம் கிடைக்குமென்பது ஏற்புடைய ஒன்றல்ல.
எனவே, KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சு எதற்காக இப்படியொரு பரிந்துரையை கொண்டு வந்தது என்பது குறித்து தமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருப்பதாக, MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கூறியுள்ளார்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத்தலங்களை நிர்வகிப்பதென்பது சாதாரண விஷயமல்ல; நிர்வாகச் செலவு, வசதிக் கட்டமைப்பு மேம்பாட்டுச் செலவை மட்டும் அது உட்படுத்தவில்லை.
மாதந்தோறும் ஆலயங்களில் சமய விழாக்களை நடத்துவதற்கும் நிதித் தேவைப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்பாரா விபத்துகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டு, அவற்றை பழுதுபார்க்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டால், நாங்கள் என போய் நிற்பது என அவர் கேட்டார்.
எனவே, RIBI முறையிலான நிதிஆண்டுதோறும் வழங்கப்படுவதே நியாயமானதாக இருக்கும்.
வேண்டுமானால் ஆலயங்களின் உண்மை நிலவரத்தைக் கண்டறிய அமைச்சின் அதிகாரிகளை அனுப்பி மதிப்பீடு செய்து விட்டு மானியங்களை அங்கீகரிக்கலாம்.
இந்து கோயில்கள் என்று எடுத்துக் கொண்டால், அவற்றின் பரப்பளவு, வந்து போகும் பக்தர்களின் எண்ணிக்கை, நடத்தப்படும் சமூக நடவடிக்கைகள், திருவிழாக்கள் போன்ற அம்சங்களையும் கருத்தில் எடுத்துகொள்ள வேண்டுமென்றார் அவர்.
தேவைப்படும் நேரங்களில் உதவிக் கரம் நீட்டி, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டியது மடானி அரசாங்கத்தின் கடமையாகும்.
அதை விடுத்து, தாங்கள் வஞ்சிக்கப்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி, மற்ற சமயத்தவர்களை ஏமாற்றமடையச் செய்யக் கூடாது என டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.