
செப்பாங், மார்ச்-14 – போலீஸை தாக்க முயன்ற 3 வெளிநாட்டு குற்றவாளிகள் சிலாங்கூர் செப்பாங்கில் உள்ள Desa Vista காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 3 மணியளவில் அருகிலுள்ள குடியிருப்பில் வீட்டை உடைத்து அக்கும்பல் திருட முயன்றுள்ளது.
அப்போது பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால் விழித்துக் கொண்ட வீட்டின் உரிமையாளர், அந்த முகமூடி கும்பலை கண்டு விட்டார்.
உடனடியாக போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.
அதற்குள் சுதாகரித்துக் கொண்ட திருடர்கள் மூவரும் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பியோடினர்.
எனினும் களத்திலிறங்கிய போலீஸ் அவர்களை கண்டுபிடித்தது.
போலீஸை கண்டதும் பாராங் கத்தியால் தாக்க முயன்றதால், மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
35 முதல் 40 வயதிலான அம்மூவரும் சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலானில் 17 கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
யார் தடுக்க வந்தாலும் வெட்டி சாய்க்கும் படு பயங்கரமான அங்கும்பலைச் சேர்ந்த மேலும் இருவருக்கு போலீஸ் வலை வீசி வருகிறது.