
புது டெல்லி, மார்ச்-27 – அனைத்துலக அளவில் பாராட்டப்பட்ட படமான ‘சந்தோஷ்’ இந்தியாவில் திரையிடப்படாது.
இது, இவ்வாண்டு பிரிட்டனின் அதிகாரப்பூர்வ படமாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமாகும்.
ஷாஹானா கோஸ்வாமி (Shahana Goswami) நடித்த அப்படத்தில், போலீஸார் கொடூரமானவர்கள் போன்று சித்தரிக்கப்படுவதோடு, சாதி பாகுபாடு மற்றும் பெண்ணடிமைத்தனம் வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான CBFC அப்படத்தின் திரையீட்டை இந்தியாவில் தடுத்து நிறுத்தியுள்ளது.
‘சந்தோஷ்’ படத்தை பிரிட்டன்-இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் சந்தியா சூரி எழுதி இயக்கியுள்ளார்.
இந்திய தணிக்கை வாரியம் அதன் வெளியீட்டைத் தடுத்ததால் அவர் மனம் உடைந்து போயுள்ளார்.
“இந்தப் பிரச்னைகள் இந்திய சினிமாவுக்கு ஒன்றும் புதியவை அல்ல; என்னமோ இதற்கு முன்பு வேறு எந்த இந்தியப் படங்களிலும் அவ்விவகாரம் எழுப்பப்பட்டதில்லை என்பது போல இம்முடிவு அமைந்துள்ளது. இது உண்மையிலேயே எங்களுக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் எற்படுத்தியுள்ளது” என அவர் சொன்னார்.
படத்தில் ஏராளமான காட்சிகளைக் கத்தரிக்குமாறு தணிக்கைக் குழு கேட்டதாகவும், அப்படி செய்தால், படத்தின் மையக் கருவே அடிபட்டு விடுமெனக் கருதி அதற்கு தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சந்தியா விளக்கினார்.
77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘சந்தோஷ்’ திரைப்படம் ‘Un Certain Regard’ பிரிவில் World Premier எனப்படும் உலக அரங்கேற்றத்தைக் கண்டது.
இந்த ஆண்டு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான Bafta விருதுக்கும் இது பரிந்துரைக்கப்பட்டது.
தவிர, ஆசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த நடிகை மற்றும் சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருதை ஷாஹானா கோஸ்வாமி மற்றும் சந்தியா சூரி வென்றனர்.