கோலாலம்பூர், அக் 28 – இ.பி.எப்பின் சந்தாதாரர்கள் தங்களது Akaun
Persaraan எனப்படும் ஓய்வு சேமிப்பு கணக்கிலிருந்து ஹாஜ் யாத்திரை செல்வதற்கான நோக்கம் உட்பட இதர நடவடிக்கைகளுக்கான பணம் மீட்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லையென இன்று மக்களவையில் நிதித்துறை துணையமைச்சர் லிம் ஹூய் யிங் ( Lim Hui Ying ) தெரிவித்தார். ஓய்வு காலத்தில் சந்தாதாரர்களின் சேமிப்பு தொகையில்
குறைந்தது அடிப்படை சேமிப்புத் தொகை 240,000 ரிங்கிட் இருப்பதை உறுதிப்படுத்துவற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 1 ஆவது கணக்கு என இதற்கு முன் விளங்கிய கணக்கு ஓய்வூதிய சேமிப்பாக கருதப்பட்டு , ஒரு நபரின் இ.பி.எப் தொகையில் 75 சதவீத்தை அது கொண்டிருந்தது.
(Account 1 ) என இதற்கு முன்னர் அறியப்பட்ட கணக்கு, ஓய்வூதிய சேமிப்பாகக் கருதப்பட்டு, உறுப்பினர்கள் 55 வயதை எட்டும்போது மட்டுமே அந்த தொகை மீட்டுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது. ஹாஜ் யாத்திரை செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இ.பி.எப் உறுப்பினர்கள் ஓய்வு பெறும் வயதை அடையும் முன் தங்களது சேமிப்பை மீட்டுக்கொள்வதை அனுமதிப்பதற்கு அரசாங்கம் தயாராய் இருக்கிறதா என பெரிக்காத்தான் நேசனல் ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் கனி அமகட் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது துணையமைச்சர் இதனை தெரிவித்தார். இவ்வாண்டு மே மாதம் 11 ஆம் தேதி முதல் இ.பி.எப்பில் Akaun Persaraan, Akaun Sejahtera மற்றும் Akaun Fleksibel ஆகிய மூன்று கணக்குகள் உள்ளன.