
கோலாலம்பூர், மார்ச் 10 – தொடக்கக் கல்வியை முடித்துக் கொண்டு இடைநிலைப் பள்ளிக்கு செல்கின்ற தமிழ் மாணவர்கள், தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை படிப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருவதால் அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என ம.இ.காவின் தேசிய ஊடகப் பிரிவின் தலைவர் சிவசுப்பிரமணியம் வலியுறுத்துதியுள்ளார்.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களில் தேர்ச்சிபெறும் மாணவர்கள்தான் தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்ககல்வி நிலையங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
15 மாணவர்கள் இருந்தால் ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலை பொதுவாக இருந்தாலும் பெரும்பாலும் தனி ஆசிரியர் இடைநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்படுவதில்லை.
ஒரு சில பள்ளிகளில் ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பகுதி நேரமாக வந்து பாடம் நடத்துகின்றனர்.
அத்தகைய வாய்ப்பு இல்லாத பள்ளிகளில் தன்னார்வத்தின் அடிப்படையில் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பாடம் நடத்தப்படுகிறது என சிவசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சிக்கல் உள்ள மாணவர்களுக்கு இந்த நிலை ஒரு தடையாகவும் பின்னடைவாகவும் இருக்கிறது.
இன்னும் சில பள்ளிகளில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களே, தாமாக முன்வந்து தன்னார்வ அடிப்படையில் இப்படி வார விடுமுறை நாட்களில் பாடம் நடத்துகின்றனர்.
மொத்தத்தில் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி என்பது இரண்டும் கெட்டான் நிலையில்தான் இருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற பதினோராவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 10 மாணவர்கள் இருந்தால்கூட இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி தொய்வு இல்லாமல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அதற்கான நடவடிக்கையை மடானி ஒற்றுமை அரசாங்கம் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
எனவே பள்ளி நாட்களில் பாட நேரத்திலேயே தமிழ், தமிழ் இலக்கிய பாடங்களை பயிற்றுவிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு இடைநிலைப் பள்ளியிலும் தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை மஇகா சார்பில் வலியுறுத்துவதாக மஇகா மத்திய செலவை உறுப்பினருமான சிவ சுப்பிரமணியம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.