
புத்ராஜெயா, நவம்பர்-6,
வரும் ஜனவரி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “இணைய நெறிமுறை (Cyber Ethics)” பாடத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.
சரளமான டிஜிட்டல் பயன்பாடு, டிஜிட்டல் நெறிமுறைகள், டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, டிஜிட்டல் உரிமைகள் மற்றும் பொறுப்பு ஆகிய 6 அம்சங்களை இது உள்ளடக்கியிருக்கும்
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக உள்ள இப்புதிய பாடம், மாணவர்கள் இணையத்தை பொறுப்புடனும், பாதுகாப்பாகவும் ஒழுக்கநெறியுடனும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
இது இணையக் குற்றங்கள், சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் ஆபத்துகளைத் தடுக்க உதவும் என கோபிந்த் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடம் இணையம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த விரிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்கும்.
இவ்வேளையில், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம் மற்றும் மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெற்றிவேலன் மகாலிங்கம், அமைச்சரின் அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார்.
கோபிந்த் சிங்கின் பார்வையும் அர்ப்பணிப்பும், நமது இளம் மலேசியர்களின் டிஜிட்டல் நெறிமுறைக் கண்ணோட்டத்தை வலுப்படுத்தும் சிறந்த முன்னேற்றமாகும் என்றார் அவர்.
அதோடு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாகவும் வெற்றிவேலன் சொன்னார்.
இது மலேசியாவில் டிஜிட்டல் பொறுப்பும், இணையப் பாதுகாப்பும் வலுப்பெறும் புதிய அத்தியாயமாகும் என்றும் அறிக்கையொன்றில் வெற்றிவேலன் சொன்னார்.



