
புத்ராஜெயா, ஜனவரி-20 – அனைத்துலகப் போலீஸான INTERPOL போன்று, இணையக் குற்றங்களைத் துடைத்தொழிக்க ஆசியான் வட்டார அளவில் பணிக்குழு அமைக்கப்பட வேண்டும்.
இணையக் குற்றம் மிக முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதால், அப்பணிக் குழுவை நிறுவுவது முக்கியமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
இணையக் குற்றவாளிகள், AI அதிநவீன தொழில்நுட்பம், ‘Dark Web’ என பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
எனவே, டிஜிட்டல் அச்சுறுத்தல்களை திறம்பட கையாள ஏதுவாக, உளவுத்துறை தகவல் பகிர்வையும் வட்டார ஒத்துழைப்பையும் எளிதாக்க அப்பணிக் குழு உதவுமென்றார் அவர்.
கடந்தாண்டு நெடுகிலும் இணையக் குற்றங்களால் மலேசியா 1.22 பில்லியன் ரிங்கிட் நட்டத்தைப் பதிவுச் செய்துள்ளது.
அதே சமயம் மில்லியன் கணக்கான இணையக் குற்றங்களை அடையாளம் கண்டது.
ஆக, இணையக் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் ஆக்கப்பூர்வமாக வலுப்படுத்தத் தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
புத்ராஜெயா மாநாட்டு மையத்தில் ஆசிய அனைத்துலகக் கண்காட்சி மற்றும் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் துணைப் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.