இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு, ஆறாம் தலைமுறைவரை OCI தகுதி நீட்டிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்-30,
இந்தியாவும் மலேசியாவும் மக்களுக்கிடையிலான உறவுகள், கல்வி மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளன.
இது, கோலாலம்பூரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள 22-ஆவது ஆசியான்–இந்தியா உச்சநிலை மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சநிலை மாநாட்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
அம்மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வாயிலாக கலந்துகொண்டார்; வெளியுறவு அமைச்சர் Dr எஸ். ஜெய்சங்கர் நேரில் பங்கேற்றார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசானுடனான சந்திப்பில் ஜெய்சங்கர் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விவாதித்தார்.
அதன் பலனாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கான OCI பதிவு தற்போது ஆறாம் தலைமுறையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்திய கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் நம்பிக்கை நிதியான ISTF-ஃபின் கீழ், மேலும் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
இது பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள மலேசிய இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டது.
அதே சமயம், மலாயா பல்கலைக்கழகத்தில் ‘திருவள்ளுவர் இருக்கை’ நிறுவப்பட்டுள்ளது.
இதை பேராசிரியர் ஏ. செல்லப்பெருமாள் தலைமையிலான இந்திய கலாச்சார உறவுகள் மன்றமான ICCR முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இந்திய–மலேசிய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியப் படியாகும் என, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



