
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – இந்து மதம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிட ஒரு நிரந்த செயற்குழு அமைக்கப்பட வேண்டுமென பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோயில் கட்டுமானம், கோயில் மேலாண்மை, சமயக் கல்வி, இந்துக்களின் நலன் காப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடவும் ஆலோசனை வழங்கவும் அச்செயற்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானை (Wan Saiful Wan Jan), நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசிய 8 இந்து இயக்கங்களின் பிரதிநிதிகள் அக்கோரிக்கையை முன் வைத்தனர்.
கோயில் குருக்கள், சட்ட வல்லுநர்கள், இளைஞர் ஆர்வலர்கள், சமயக் கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோருடன், பாங்கி பெர்சாத்து கிளையின் பெர்செக்குத்து பிரிவின் தலைவர் வசந்த குமாரும் அச்சந்திப்பில் பங்கேற்றார்.
இப்பரிந்துரை ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஒன்றுதான்; ஆனால் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
எனவே, அதனை பெர்சாத்து கட்சி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பரிசீலனைக்கு எடுத்துச் செல்ல வான் ஜான் உறுதியளித்தார்.
மலேசிய இந்துக்களின் சமூக-அரசியல், பொருளாதார நிலைமை தொடர்பான பல்வேறு விஷயங்களும் அச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.
இது போன்ற நல்லெண்ணச் சந்திப்புகள், பெர்சாத்து மற்றும் பெரிக்காத்தானை இந்தியச் சமூகத்துடன் மேலும் நெருக்கமாக்கும் என வான் ஜான் நம்பிக்கைத் தெரிவித்தார்.