
பைத்துல் மக்திஸ், பிப்ரவரி-27 – நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதற்காகக் காத்திருக்கும் ஹமாஸ் தரப்பு, இஸ்ரேல் பிணைக் கைதிகள் நால்வரது சடலங்களை ஒப்படைத்துள்ளது.
சில நாட்களாக இழுபறி நீடித்த நிலையில், எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த நடவடிக்கையின் பலனாக இது சாத்தியமாகியுள்ளது.
இந்நிலையில், காசாவில் கைதான அல்லது இஸ்ரேலியில் சிறை வைக்கப்பட்டுள்ள 620 பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக ஹமாஸ் காத்திருக்கிறது.
பிணைக் கைதிகளை மாற்றிக் கொள்ளும் அந்நடவடிக்கையானது, காசாவில் அமுலுக்கு வந்த ‘வலுவற்ற’ போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்.
ஜனவரி 19-ல் அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் பல்வேறு சவால்களைச் சந்தித்தாலும், ஏதோ இதுவரையில் தாக்குப் பிடித்து வருகிறது.
இவ்வாரம் அதன் முதல் கட்டம் நிறைவடையும் நிலையில், அடுத்தக் கட்டத்தின் என்னவாகும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
தங்களுக்கு இதுவரை மேல் தகவல்கள் எதுவும் வரவில்லை என ஹமாஸ் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.