
புத்ராஜெயா, டிசம்பர் 19-மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனைச் சந்தித்து, உணவகத் துறையை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளை விவாதித்தது.
அச்சந்திப்பில், Akta 60K மற்றும் Akta 446 சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைந்தபட்சம் தளர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக, PRIMAS தலைவர் டத்தோ J. கோவிந்த்சாமி தெரிவித்தார்.
தவிர, வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கைகள் தொடர்பான சவால்கள், குறிப்பாக புதிய கோட்டாக்களை திறந்து, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க உதவ வேண்டும் என்பதையும் தாங்கள் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்..
இப்பிரச்னைகளை புரிந்துகொண்டு, உரிய தீர்வு காண ரமணன் உறுதியளித்ததாக கோவிந்தசாமி கூறினார்.
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் ஆகியோரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் PRIMAS-சுடன் சென்றிருந்தனர்.
அமைச்சர் ரமணனுடனான இச்சந்திப்பு புது நம்பிக்கையைத் தருவதாகவும், உணவகத் துறை நீடித்து நிலைக்க நடைமுறை தீர்வுகளை அவர் நிச்சயம் தருவார் எனவும் கோவிந்தச்சாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.



