கோலாலம்பூர், செப்டம்பர் -14, தாங்கள் நடத்தி வரும் சிறார் இல்லங்களில் ஒன்றிரண்டு ஓரினப் புணர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது உண்மைதான்;
என்றாலும் அது ஒரு சிலரை மட்டுமே உட்படுத்தியதாக, குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைவர் Nasiruddin Mohd Ali கூறியுள்ளார்.
ஆனால், ஓரினப் புணர்ச்சியின் கூடாரம் போல் அம்மையங்கள் சித்தரிக்கப்படுவதேன் என facebook-கில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கேட்டார்.
எங்களைக் கேட்காமல் 402 சிறார்களையும் போலீஸ் அழைத்துச் சென்றதேன்?
அவர்களுக்கு அப்படி என்ன அவசரம்? என்றும் Nasiruddin கேள்வி எழுப்பினார்.
அங்குள்ள சிறார்கள் ஒருவரை ஒருவர் ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டது, கால் உரோமங்களைக் கொண்டு தயாரித்த நீரை பருகச் சொன்னது போன்றதெல்லாம் இட்டுக் கட்டிய பொய்கள் என்பது மட்டுமல்ல, கேட்கவே காது கூசும் இழிவுச் செயலாகும்.
போதாக்குறைக்கு, ஆள் கடத்தல், சிறார் கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இவையெல்லாம் எங்களின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் செயலே.
சட்டப்பூர்வமாக அதனை எதிர்கொண்டு உண்மையை நிரூப்பிப்போம் என Nasiruddin கூறிக் கொண்டார்.
Global Ikhwan நிறுவனத்தின் கீழ் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் செயல்படும் 20 சிறார் இல்லங்களில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட Op Global சோதனை நடவடிக்கையின் போது, 1 வயது குழந்தை முதல் 17 வயது வரையிலான 402 பேர் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, சிறார்களையும் மதத்தையும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அந்த இல்லங்களைச் சேர்ந்த 171 கைதாகினர்.