
கலிஃபோர்னியா, செப்டம்பர்-26,
வழக்கமாக 2 முதல் ஐந்தாறு பேர் வரை கும்பலாக நகைக்கடையில் கொள்ளை என நாம் கேள்விப்பட்டிருப்போம்;
ஆனால் அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவமொன்றில், ஒரே நேரத்தில் 20 முகமூடி கொள்ளையர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து சூறையாடிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
திங்கள் மதியம், முதலில் இருவர் துப்பாக்கியுடன் வந்தனர்; மற்றவர்கள் சுத்திகள், இரும்புக் கம்பிகள், கொத்துக் கோடரியுடன் திபு திபுவென கடைக்குள் புகுந்து கண்ணாடிப் பேழைகளை உடைத்து நகைகளைப் பைகளில் நிரப்பினர்.
நகைகளோடு, கொள்ளையர்கள் வெளியில் காத்திருந்த கார்களில் தப்பினர்.
தகவல் கிடைத்து போலீஸார் சாலைகளில் பின்தொடர்ந்தாலும், பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்முயற்சியை நிறுத்தினர்.
பின்னர் விமானக் கண்காணிப்பின் மூலம் வாகனங்களின் தடம் பின்தொடரப்பட்டு, Oakland மற்றும் Dublin நகரங்களில் கொள்ளையர்களில் சிலர் கைதுச் செய்யப்பட்டனர்.
ஒரே நேரத்தில் அதுவும் பட்டப் பகலில் பெரியதொரு கும்பல் கடைக்குள் புகுந்து கொள்ளையிட முடிந்திருப்பது, அங்குள்ள மக்கள் குறிப்பாக வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகளும் பொது மக்களும் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மீண்டும் மீண்டும் திருடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வழிவகுக்கும் Proposition 36 சட்டம் குறித்து விவாதம் கலிஃபோர்னியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.