
காட்மண்டு, செப்டம்பர்-11 – அரசு எதிர்ப்புப் போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறி நாடே பற்றி எரிந்த நிலையில், நேப்பாளத் தலைநகர் காட்மண்டுவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைத்து கொளுத்தப்பட்ட நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பு வளையத்தைப் போட்டுள்ளது.
இராணுவ ரோந்துப் படைகள், கவச வாகனங்கள், தீயணைப்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் விரைவில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினாலும், தற்போதைக்கு ஊரடங்கு தொடரும், வன்முறை கடுமையாக தடுக்கப்படும் என இராணுவம் எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சமூக ஊடகத் தடைக்கு பிறகு நேப்பாளத்தில் இந்த போராட்டம் வெடித்தது.
ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசாங்கம் தோல்வியடைந்ததாகக் கூறி, “Gen Z” என அழைக்கப்படும் இளம் தலைமுறை அப்போராட்டத்தை முன்னெடுத்தது.
எனினும் போலீஸார் கண்ணீர் புகை, இரப்பர் குண்டுகளை பயன்படுத்தியதில் 25 பேர் உயிரிழந்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் பெரும் வன்முறை வெடித்தது;
நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் தனிப்பட்ட இல்லமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
ஒரு முன்னாள் பிரதமரின் மனைவி வீட்டில் தீ வைத்து கொல்லப்பட்டார்; அமைச்சர்கள் சாலைகளில் துரத்தி சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.
நிலைமை எல்லை மீறவே, வேறுவழியின்றி பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.