மலேசியா

காணக்கிடைக்காத காட்சி: அப்பா, முன்னாள் OCPD டத்தோ ஷானும் மகளும் ஓரே நேரத்தில் வழக்கறிஞரான தருணம்

“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்”…

”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”…

இவ்விரண்டு திருக்குறள்களையும் ஒரே நேரத்தில் மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் பினாங்கைச் சேர்ந்த ஒரு தந்தையும் மகளும்…

முன்னாள் SAC போலீஸ் அதிகாரியான டத்தோ S.Shanmugamoorthy , Sharvitha Shanmugamoorthy ஆகியோரே அப்பெருமைக்குச் சொந்தக்காரர்கள் ஆவர்.

சட்டம் படித்து, இருவரும் அண்மையில் கோலாலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரே சமயத்தில் வழக்கறிஞர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

கடந்தாண்டு போலீஸ் வேலையிலிருந்து ஓய்வுப் பெற்றவரான Shanmugamoorthy, சும்மா இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் 9 மாதங்கள் வழக்கறிஞர் பயிற்சியை முடித்துள்ளார்.

எதையாவது புதுதாக சாதிக்க நினைத்த தமக்கு, இருவரும் சேர்ந்தே சட்டம் பயில்வோம் என மகளே ஆலோசனைக் கூறியதாக ஷண்முகமூர்த்தி சொன்னார்.

போலீஸாக இருக்கும் போதே சட்டம் படித்தவரான அவர், நினைத்தால் சாதிக்கலாம் என்பதே தமது இப்பயணம் உணர்த்துவதாகக் கூறினார்.

போலீஸாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகி இருப்பதற்கு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் ஆகியோரின் ஊக்கமும் காரணம் என அவர் நெகிழ்ந்தார்.

இத்தனை வயதில் தம்மால் முடியும் என்றால், இளைஞர்களும் சட்டத் துறையில் சாதிக்க முடியும் என்றார் அவர்.

இவ்வேளையில் தந்தையுடன் தாமும் பக்கத்தில் வழக்கறிஞராக நிற்பது பெருமையையும் நெகிழ்ச்சியையும் தருவதாக ஷர்விதா தெரிவித்தார்.

“சட்டக் கல்வியில் எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாதும், அவற்றை எப்படியோ சமாளித்து விட்டேன்; ஆக முடியாதது எதுவுமே இல்லை” என்றார் அவர்.

தனது இந்தப் பயணத்தில் உற்சாகத்தையோ நம்பிக்கையையோ குறைக்கும் வகையில், உடனிருந்தவர்களில் யாரும் தடங்கலாக இல்லாமல் இருந்தது, உள்ளபடியே தமக்கு அதிர்ஷ்டம் தான் என ஷர்விதா கூறினார்.

தனது வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

பெரும்பாலும் பிள்ளைகள் வழக்கறிஞராவதைப் பார்த்து பெற்றோர்கள் ஆனந்தமடைவார்கள்; சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் பட்டம் வாங்குவதை கண்டு பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவர்.

இங்கு தந்தையும் மகளும் ஒரே நேரத்தில் அத்தருணத்தை அனுபவித்து, குடும்பத்தாரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!