கோலாலம்பூர், டிசம்பர்-29 – கிளந்தானில் F&B எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்கும் கடைகளுக்கு ஹலால் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட புதிய விதிமுறைக்கு, செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கான ஹலால் கோட்பாட்டை தாம் முழுமையாக மதிப்பவன் என்றாலும், மலேசியாவுக்கு அடிப்படையாகத் திகழும் பல்லின – மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும், இந்த ஹலால் கொள்கை சிக்கலை ஏற்படுத்துவதை மறுக்க இயலாது என்றார் அவர்.
கிளந்தானில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை சைவ உணவுகள் அல்லது ஹலால் அல்லாத உணவுகளைக் கையாளுகின்றன.
அவர்களையும் ஹலால் சான்றிதழ் வாங்க கட்டாயப்படுத்துவது நியாயமற்றது மட்டுமல்ல, நடைமுறைக்கும் ஒவ்வாத ஒன்று.
இது தத்தம் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வணிகம் செய்ய முஸ்லீம் அல்லாதோருக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
இதனால் அவர்கள் ஒரேடியாக வியாபாரத்தை மூட வேண்டியிருக்கும் அல்லது செயல்பாட்டை கணிசமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
இது தவிர, ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும்; அதற்காக கட்டணமும் அதிகம்.
எனவே, கட்டாய ஹலால் சான்றிதழ் உத்தரவை கிளந்தான் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென Dr லிங்கேஷ் கேட்டுக் கொண்டார்.
மாறாக, முஸ்லீம் வாடிக்கையாளர்களைக் கவர விரும்பும் வணிகத் தளங்கள் தன்னார்வ முறையில் ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிப்பதை ஊக்குவிக்கலாம் என்றார் அவர்.