
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பிறகு, அச்சிகிச்சையின் உண்மையான கட்டணத்தைவிட அதிகமான கட்டண தொகையை பில்-இல் எழுதி மாற்றி கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட நோயாளி ஒருவரின் செயலை சமூக வலைத்தளத்தில் மருத்துவர் அம்பலப்படுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.
சம்பந்த்தப்பட்ட பெண் நோயாளி கிளினிக்கிற்கு இரண்டு முறை மட்டுமே வந்திருந்தார் என்றும் முதல் வருகையில், மருந்தும், மருத்துவச் சான்றிதழும் பெற்றபின், 50 ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்தியதாகவும் அம்மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சைக்குப் பின்னர், அந்த ரசீதில் தனது பெயரில் அல்லாது, வேறொரு ஆணின் பெயரில் வழங்கப்பட வேண்டும் எனவும் பில்லில் குறிப்பிடப்பட்ட தொகையை உயர்த்த முடியுமா எனவும் கோரியுள்ளார் அப்பெண்.
இதற்கு பதிலளித்த அம்மருத்துவர் அதைத் தான் செய்ய இயலாது எனவும் இப்படிச் செய்வது நேர்மையற்ற செயல் எனவும் அப்பெண்ணிடம் விளக்கமளித்திருக்கின்றார்.
மேலும் தனது மருத்துவமனையில் அனைத்து பரிவர்த்தனைகளும் நேர்மையாக இருக்க வேண்டும் எனவும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக வேறு இடத்தை பார்த்துக் கொள்ளவும் என கூறியுள்ளார் அம்மருத்துவர்.