Latestமலேசியா

கிள்ளான் அரச மாநகரின் தூய்மை குறித்து சிலாங்கூர் சுல்தான் பெருத்த ஏமாற்றம், வருத்தம்

கிள்ளான், டிசம்பர்-6 – கிள்ளான அரச மாநகரின் தூய்மை குறித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா பெருத்த ஏமாற்றமும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் குறிப்பாக கிள்ளான் துறைமுகம் வழியாக வரும் கப்பல் சுற்றுலா பயணிகள், அத்துறைமுகமும் கிள்ளான் மாநகரமும் குப்பைகளால் மாசடைந்திருப்பதாகவும், பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.

ஒரு பக்கம் கிள்ளான் அரச மாநகரின் வரலாற்றுச் சிறப்பையும், வளர்ச்சியையும் கண்டு நாம் பெருமிதம் கொள்ளும் அதே சமயம், மறுபக்கம் அசுத்தமாகவும் அலங்கோலமாகவும் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

குப்பைக்கூளங்களால் ஆறுகள் படுமோசமாக தூய்மைகேடு அடைந்திருப்பதை சொல்லவே வேண்டாமென சுல்தான் ஷாராஃபுடின் வருத்தத்துடன் சொன்னார்.

ஆற்றில் குப்பைகளும், முறையான பராமரிப்பு இல்லாததால் அடைத்துகொண்ட கால்வாய்களாலும் கிள்ளானில் அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

ஊராட்சி மன்றங்களிடமும் மாநில அரசிடமும் பலமுறை சொல்லியும் எதுவும் நடந்தபாடில்லை.

வெள்ளம் ஏற்படும் ஒவ்வொரு முறையும், பருவகால மாற்றத்தின் மீதும் வழக்கத்திற்கு மாறான மழையின் மீதும் பழிபோட்டு தப்பித்து விடுவதா என அவர் காட்டத்துடன் கேட்டார்.

சொல்லி சொல்லி நானே களைத்து விட்டேன்; எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது தான் மிச்சம் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியை பக்கத்தில் வைத்துகொண்டே சுல்தான் ஷாராஃபுடின் பெருத்த ஏமாற்றத்துடன் கூறினார்.

அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் படும் இன்னல்களை மாநில அரசு சிந்திக்கவில்லையா?

வெள்ளப் பிரச்னை அப்படியொன்றும் தீர்க்க முடியாத விஷயம் அல்லவே; மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என சுல்தான் ஷாராஃபுடின் இடித்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!