
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – கோலாலம்பூர் Gardens Mid Valley மற்றும் KL Eco City பேரங்காடிகளுக்கு அருகேயுள்ள கிள்ளான் ஆற்றில் காணப்பட்ட முதலையைப் பிடிக்க, மேலுமொரு பொறி கூண்டு
வைக்கப்பட்டுள்ளது.
முதல் கூண்டு பேரங்காடிகளுக்கு அருகே பொருத்தப்பட்ட வேளை இந்த இரண்டாவது கூண்டு, முதலை கடைசியாகக் காணப்பட்ட செப்பூத்தே ஆற்றருகே வைக்கப்பட்டுள்ளது.
அந்த 3 மீட்டர் நீள முதலையைப் பிடிக்கும் முயற்சி ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிருள்ள கோழிகளைத் பொறியாக வைத்து PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முதலைப் பிடிபடும் வரை அப்பகுதியை விட்டு சற்றுத் தள்ளியே இருக்குமாறு பொது மக்களை அத்துறை கேட்டுக் கொண்டது.
முதலையின் நடமாட்டம் ட்ரோன் மூலமாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி 23-ஆம் தேதி பெய்த கடும் மழையால் முதலையைப் பிடிக்கும் முயற்சி தடைப்பட்டது.
பிப்ரவரி 20-ஆம் தேதி முதன் முதலாக அங்கு முதலை தென்பட்ட செய்தி வைரலானதும், அவ்விரு பேரங்காடிகளையும் இணைக்கும் பாலத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியது குறிப்பிடத்தக்கது.