
கிள்ளான், பிப்ரவரி-22 – கிள்ளான், மேரு பெரிய சந்தை வளாகத்தில் இன்று அதிகாலை சிலாங்கூர் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது, வெளிநாட்டு வியாபாரிகளும் கள்ளக்குடியேறிகளும் தலைத்தெறிக்க ஓடினர்.
இதனால் அதிகாலை 5 மணிக்கே அப்பகுதி பெரும் பரபரப்பானது.
அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க, பலர் கால்வாயில் படுத்துக் கொண்டனர், சிலர் மேசைகளின் அடியில் ஒளிந்துக் கொண்டனர், இன்னும் சிலர் கூரைகளின் மீதேறினர்.
பலர் சந்தையிலிருந்தே ஓட்டம் பிடித்தனர்.
எனினும் முழு தயார் நிலையில் சென்ற அதிகாரிகள் 632 பேரை கைதுச் செய்தனர்.
கால்வாயில் 20 நிமிடங்கள் ஒளிந்திருந்த இந்தோனீசிய ஆடவரும் சிக்கினார்.
பரிசோதனைக்குப் பிறகு 32 பேர் விடுவிக்கப்பட்டனர்.
எஞ்சிய 600 பேரில் 530 பேர் மியன்மார் நாட்டவர்கள், 85 பேர் வங்காளதேசிகள், இந்தோனீசியர்கள் 9 பேர், இந்தியப் பிரஜைகள் ஐவர், நேப்பாளி ஒருவர் என தெரிவிக்கப்பட்டது.
முறையானப் பயணப் பத்திரம் இல்லாதது, சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தியது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் தங்கியிருந்த குற்றங்களுக்காக அவர்கள் கைதாகினர்.
கள்ளக்குடியேறிகளில் சிலர் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்யும் வேளை, மேலும் சிலர் உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அவர்களுக்கு வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக வாடகை விதிக்கப்படுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.