கொடிய நோய்ப் பரவலை முறியடிக்க மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை ‘ஆயுதமாக்கும்’ விஞ்ஞானிகள்

சிட்னி, ஜனவரி-12, டெங்கி, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை முறியடிக்க கொசுக்களையே ஆயுதமாக்கும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Macquarie பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் அக்கண்டுபிடிப்பு, toxic male technique என அழைக்கப்படுகிறது.
அதாவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களின் விந்தணுக்களில், நச்சுத்தன்மையுடைய ஒரு வித புரதம் உற்பத்தியாகிறது.
அப்புரதமானது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்திற்காக சேரும்போது, பெண் கொசுக்களின் உடலுக்குள் சென்று அவற்றைக் கொன்று விடும்.
உயிர்கொல்லி கிருமிப் பரவலுக்கு பெண் கொசுக்களே காரணமென்பதால், ஆராய்ச்சியாளர்கள் அவற்றை குறி வைத்துள்ளனர்.
பெண் கொசுக்களை அழிப்பதன் மூலமாக, மனிதர்களுக்கு டெங்கி மலேரியா போன்ற நோய்கள் பரவும் வாய்ப்புகள் மெல்லக் குறையுமென அவர்கள் நம்புகின்றனர்.
உலகில் கொசுக்களால் பரவும் டெங்கி, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கிருமிகளால் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.