கோத்தா திங்கி, செப்டம்பர் -11 – ஜோகூர், கோத்தா திங்கி, பண்டார் பெனாவாரில் கழிவு நீர் ஆலையில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த குத்தகையாளர் அதனைக் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.
தடவியல் அதிகாரிகளும் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டதில், குப்பைகளை வடிகட்டி அரைக்கும் இயந்திரத்தில் கைலி சிக்கிக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
அவ்வியந்திரத்தின் நடுவில் மாட்டிக் கொண்ட எலும்புக் கூடு, தீயணைப்பு மீட்புக் குழுவின் உதவியோடு வெளியே எடுக்கப்பட்டது.
மொத்தமாக 1 மண்டை ஓடு, 7 நீண்ட எலும்புகள், 2 இடுப்பு எலும்புகள், ஒரு கைப்பிடி தலைமுடி ஆகியவை சிக்கின.
எலும்புகள் சுல்தானா அமீனா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டன.
சவப்பரிசோதனை முடிவு தெரியும் வரை அச்சம்பவத்தை திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால், கோத்தா திங்கி போலீசை தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.